திருமந்திரம் 5 - 10

6
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

நம் உயிருக்குள் உயிராக கலந்து நிற்கும் சிவனுக்கு இணையான தெய்வம் வெளியுலகில் தேடினால் கிடைப்பதில்லை!
பாருலகில் வெளியுலகில் அவனுக்கு இணையான ஒருவன் யாரும் இல்லை!
அந்த ஈசனை நம் உயிருக்கு உயிரூட்டிய இறைவனை நம்முடைய (உடலில்)புவனம் கடந்து - தவன சடைமுடி (ஆக்கினை துரியத்தில்) தாமரை யில் வந்து நிற்கும் இறைவா உன்னோடு என்றும் நிலைப்பேன்!

7
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.

உயிரை(விந்து / நாத சக்தி) இழந்தவர்களுக்கு மரணம் அற்ற நிலை இல்லை!
விந்து நாத சக்தி இல்லாமல் அருந்தவம் / யோகம் செய்ய பயன் இல்லை!

விந்து நாத சக்தி இழந்தவர்களுக்கு மூன்று பெரும் தெய்வங்கள் (படைத்து காத்து அழிக்கும்) இணைந்து உதவினாலும் ஆவதொன்றும் இல்லை!

உயிரை காத்து நிற்காதவர்களுக்கு மிருக தன்மை கடந்து ஈசத்துவம் அடையும் / முக்தி அடையும் / முழுமை அடையும் பாதை எனக்கும் தெரியாதே!

8
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
படைப்பு காலத்தில் முன்பாக (படைத்தல் காத்தல் அழித்தல்) முத்தவனாக உள்ளவன் ஈசன்!
அவனுக்கு இணையானது என எதுவும் இல்லாத தலைமகன்!
ஈசனை அப்பா எனில் அப்பனாக (உயிருக்குள் உயிராக) விந்து/நாத சக்தியாக உள்ளவன் !
அகத்தில் நிலைப்போருக்கு ஆக்கினை துரியமாகி பொன்னை ஒப்பான் எம் இறை ஈசன்!

9
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

நெருப்பில் வெப்பமாக இருப்பவன், நீரிலும் தண்ணீராக அமைபவன்
உயிரில் இருந்து வெளிப்படும் அனைத்து எண்ணங்களை விட சூன்ய மௌனத்தில் நல்லவனாகி இருப்பவன்! தன்னை உணர்ந்த நல் அன்பர்களுக்கு உயிருக்கு உயிராக கலந்து நிற்பவன்! குழந்தையின் விருப்பத்தை நன்மை தீமை உணராது பூர்த்தி செய்யும் தாயை விட… நல்லதை மட்டுமே நல்கும் நல்லவன் நம் துரிய (தாழ் சடை) சக்கரத்தில் நின்று அருள் புரியும் ஈசன்!


10
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொன்னை போன்ற ஆக்கினை துரிய மேலை தவத்தில் நிலைக்க பின்னால் இருந்து உதவுபவன் பெயர் நந்தி! (பசுவாகிய மனிதன் உண்ணும் உணவு இறுதி படியாக விந்து நாதமாகி அதுவே பின் மேலை தலையில் ஆக்கினை துரியமாகி பொன் போல புரிந்து ஒளிரும்!)

என்னால் தொழப்படும் எம்முடைய இந்த இறைவனை, ஈசனை.. மற்றவர்களால் உணர இயலாது .. அவரவர், அவரவர் தவத்தில் மேன்மை அடையும்போதே அவரவர் சிவத்தை தொழுது உணர இயலும்…